Sunday, 4 September 2016

குற்றமே தண்டனை - எனது பார்வையில்.






விதார்த் அதாவது  'மைனா  ஹீரோ' இந்தப் படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார்.முக்கியமான கதாபாத்திரங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ்,ரகுமான் ஆகியோர் நடித்துள்ளனர்.காக்க முட்டை இயக்குனரின் இரண்டாவது படம்.

படத்தின் தலைப்பு ஒரு அனுமானத்தை(guess) எனக்குள் ஏற்படுத்தி இருந்தாலும் இந்தப் படம் ஒரு 'கொலை மர்மம்' சார்ந்ததாக இருக்கும் என்ற எண்ணம் சுத்தமாக இல்லாமல்  திரையரங்கு சென்று அமர்ந்தேன்.மெல்ல மெல்ல  எதார்த்த  காட்சிகளால்  இளையராஜாவின் பின்னணி இசையோடு கதை அவிழ, அது புரிய ஆரம்பித்தது.எதிர்பார்க்காத திருப்பங்கள் இருந்தன;சுவாரசியம் இருந்தது. ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது இன்னொரு உலகத்தால் நம் நேரத்தை நாமே அறியா வண்ணம் கடத்த வைப்பது.அதை இந்த படம் முழு நேரத்திற்கு இல்லை என்றாலும் பெரும்பான்மையான நேரத்திற்கு செய்தது.

படம் நகர ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே விதார்த்தின் நிலையினால் அந்த கதாபாத்திரத்தின் மீது  மனம் பரிவு கொண்டது; கதாநாயகனுக்கான ஆதரவு நிலையை மனம் எடுத்து விட்டது.ஆனால் கதை நகர நகர ஒரு கட்டத்தில்  கதநாயகன் இப்படி செய்வது சரியா தவறா என்று எண்ணினேன். நாம் இந்த நிலையில் இருந்தாலும் இப்படி தான் நடந்திருப்போமோ என்ற எண்ணமும் தோன்றியது. இவ்வாறு நம் எண்ணங்கள் வேறு வகையில் பயணிக்கும் போது, இரண்டாம் பாதியில் கதாநாயகனின் நிறம் மாறுகிறது.மெல்ல மெல்ல இவன் நம்மில் ஒருவன் இல்லையோ என்ற எண்ணம் எழுகிறது.அவன் செய்யும் காரியங்களை செய்வதற்கு அசாதாரண  தைரியம்  வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.இருந்தாலும் அவனுக்கான என் மனதின் ஆதரவு முழுமையாக இன்னும் விலகவில்லை.ஆனால் முடிவில் (climax) ஒரு பெரும் திருப்பம் (Twist) ஏற்படுகின்றது. அதை நான்  எதிர்பார்க்கவில்லை.அதுவரை நான்  கொண்டு இருந்த எண்ணங்களை திருப்பி போட்டு விட்டது.நடுவில் ஒரு சின்ன துப்பு(clue) கிடைத்தாலும் விதார்த்தின் எதார்த்தமான நடிப்பு என்னை அதை நோக்கி மேலும் யோசிக்காமல் செய்து விட்டது. இந்தக் கதைகேற்ற  நடிப்பை   வெளிப்படுத்துவது சிரமம் அதை அருமையாக செய்து இருக்கிறார் விதார்த்.


படம் முடிவடையும் வேளையில் சொல்ல வந்த கருத்தைப் படம் சரியாக சொல்லியதா? என்ற சந்தேகம் வந்தது.நம்முடைய லாபத்திற்காக சற்றே நேர்வழியில் இருந்து விலகி குற்றம் புரிந்தால் அந்தப் பலனை நம்மால் அனுபவிக்க முடியும் என்று கூற முடியாது மற்றும் மனசாட்சி தொடர்ந்து நம்மை உருத்தி தண்டனை கொடுக்கும் என்பதே படம் சொல்ல வந்த கருத்து.ஆனால்  படத்தினால் இதை மனதில் பதிய வைக்க முடியவில்லை.ஏன் திரைப்படத்தில் கருத்தைப் பற்றி நீ  இவ்வளவு பேசுகிறாய் என்று கேட்டால்,கதாநாயகனைச் சார்ந்த படம் என்றால் (Hero oriented movie) இதை கேட்டு இருக்க மாட்டேன் .ஆனால் கதாநாயகனை ஒரு சாதாரண கதாபாத்திரமாக கருதி எதார்த்தமாக உருவாக்கிய இந்தக்  கதை மனதிற்கு ஒரு ஆழமான, நாம் அன்றாட வாழ்வில் புறக்கணித்த ஒரு உணர்ச்சியை உணர்த்த வேண்டும் அல்லது ஒரு  பாடத்தை மனதிற்குப் புரிய வைக்க வேண்டும்,அதை செய்யவில்லை என்று நினைத்தேன்.  ஒரு படைப்பை உருவாக்குவது எளிதல்ல மேலும் படைப்பாளிகளுக்கு இருக்கும் வியாபார நெருக்குதலில் சமரசமும் செய்ய வேண்டி இருக்கும் என்பதையும் உணர்கிறேன்.தைரியமாக தன்னுடைய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷையும் பாராட்ட வேண்டும்.